பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறிக்க முயற்சி
பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறிக்க முயற்சி
கோவை
கோவைப்புதூரில் கூரியர் நிறுவன ஊழியர்போல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறிக்க முயற்சி நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி குறித்து போலீசில் கூறியதாவது:-
ஆடை வடிவமைப்பாளர்
கோவையில் உள்ள கோவைப்புதூர், தில்லை நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது40). இவருடைய கணவர் மோதிலால் (45) தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று பகல் 12 மணியளவில் சங்கீதா, தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு வாலிபர், கூரியர் தபால் வந்து இருப்பதாக கூறினார். அந்த வீட்டில் நாய் இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வந்து தபாலை வாங்குமாறு கூறியதால் சங்கீதா வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
உடனே அந்த வாலிபர் தபாலை கொடுப்பதுபோல், திடீரென்று சங்கீதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நகையை பிடித்தபடி கூச்சல் போட்டார்.
கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கத்தியால் சங்கீதாவின் தோள்பட்டையில் குத்தினார்.இதனால் சங்கீதா நிலை தடுமாறி ரத்தவெள்ளத்தில் துடித்தபோது, அந்த ஆசாமி பொதுமக்களிடம் பிடிபட்டு விடக்கூடாது என்று கருதி தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சங்கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து நகையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "அந்த ஊழியர் உண்மையான கூரியர் ஊழியர் கிடையாது. கூரியர் ஊழியர் போல் நடித்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் "என்று தெரிவித்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதி குடியிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.