2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக கூறி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக கூறி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் மாரம்மாள் (வயது 35). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட்டார். மாரம்மாளுக்கு 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாரம்மாள், தன் மீதும், 2 குழந்தைகள் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் 3 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் மாரம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நிலம் அபகரிப்பு
அப்போது அவர் கூறுகையில், தனது கணவருக்கு சொந்தமாக ஓசூர், மத்திகிரியில் உள்ள 20 சென்ட் நிலத்தை உறவினர்கள் அபகரித்து வைத்துக்கொண்டு தன்னை சித்ரவதை செய்கிறார்கள். இது தொடர்பாக போலீசார், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்து விசாரிக்க கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.