வீட்டுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: ஓய்வுபெற்ற அரசு அலுவலர் தீக்குளிக்க முயற்சி கடலூரில் பரபரப்பு


வீட்டுக்கு சீல் வைக்க எதிர்ப்பு:    ஓய்வுபெற்ற அரசு அலுவலர் தீக்குளிக்க முயற்சி    கடலூரில் பரபரப்பு
x

வீட்டுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தொிவித்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர் தீக்குளிக்க முயன்றாா்.

கடலூர்


கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள்நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேதவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன் (வயது 64) என் பவர் வீடு கட்டி வசித்து வந்தார். இதற்காக மாத வாடகை அவர் செலுத்தி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் ரூ.5 லட்சத்துக்கு மேல் பாக்கி நிலுவையில் இருந்தது. இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க சென்றனர். அதற்கு சுந்தரேசன் எதிர்ப்பு தெரிவித்து, தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரிடம் போலீசார், அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் வீட்டில் இருந்த பொருட்களை காலி செய்தனர். பின்னர் அந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

இது பற்றி சுந்தரேசன் கூறுகையில், அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தி விட்டேன். ஆனால் கூடுதலாக பணம் கேட்கிறார்கள்.நான் அலுவலகத்தில் கொடுத்த பதிவேடுகளை மறைத்து விட்டார்கள். அந்த பதிவேடுகளை மறைத்து எனது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்து விட்டார்கள் என்றார். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story