ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி


ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி
x

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்தனர். பின்னர் அதிகாரிகள் 2 வீடுகளை இடித்து அகற்றினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்தனர். பின்னர் அதிகாரிகள் 2 வீடுகளை இடித்து அகற்றினர்.

ஆக்கிரமிப்புகள்

திருவண்ணாமலையில் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்த அரசு நிலங்கள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

எனவே அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரப்புகளை அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை செங்கம் சாலையில் கிரிவலப்பாதையில் பாறை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து 2 வீடுகள் கட்டும் பணி நடந்து வருவதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்தனர். எனினும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

சமீபத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது அவர்கள் கால அவகாசம் கேட்டனர். ஆனாலும் இதுவரை அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, தாசில்தார் சரளா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது அந்த வீடுகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் முன்பு அழுது, புலம்பிக் கொண்டு, தரையில் உருண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரப்பை அகற்ற முற்பட்டனர். அப்போது திடீரென அவர்கள் மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

இதனால் அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் 2 வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story