கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி
கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலைக்கு முயன்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் அனிதா(வயது 33). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சின்னப்பா நகரை சேர்ந்த இந்திரா (53) என்பவரிடம் ரூ.1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். தினசரி, வார அடிப்படையில் கடனுக்கு வட்டி செலுத்தி வந்த நிலையில், அவர் ரூ.6 லட்சம் வரை வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் அசல் மற்றும் வட்டித்தொகையை கேட்டு இந்திரா தனது மகன் மணிகண்டன், மகள் ராதா, சித்ரா, ஹரி ஆகியோருடன் சேர்ந்து அனிதாவின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். மேலும் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அனிதா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கந்து வட்டி கொடுமை குறித்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் அளித்தார். அதன்பேரில் இந்திரா, அவரது மகன், மகள் உள்பட 6 பேர் மீது கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.