விவசாயியை கொலை செய்ய முயற்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சிறை தண்டனை-பொள்ளாச்சி சப்-கோர்ட்டு தீர்ப்பு
விவசாயியை கொலை செய்ய முயன்றதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப்-கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
பொள்ளாச்சி
விவசாயியை கொலை செய்ய முயன்றதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப்-கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
கொலை முயற்சி
ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 65). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே வண்டித்தட பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
அப்போது அப்புசாமியை அவர்கள் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் அப்புசாமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் பழனிசாமி (40), அவரது மனைவி காந்திமதி (36), முத்துக்குமார் (42), அவரது மனைவி சுமதி (40) மற்றும் வனிதா (20), வேலாத்தாள் (70) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சிறை தண்டனை
இதுதொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனவள்ளி தீர்ப்பு கூறினார். அதில் பழனிசாமி, முத்துக்குமாருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சுமதி, காந்திமதி, வனிதா, வேலாத்தாள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமாக விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த அதிகாரி மற்றும் சாட்சிகளை கோர்ட்டில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய போலீசார் ஆகியோரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினார்.