சிறுத்தைப்புலியை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி
பரமத்திவேலூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் முயற்சி செய்தனர்.
பரமத்திவேலூர்
சிறுத்தைப்புலி
பரமத்திவேலூர் அருகே இருக்கூர் செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜா என்பவரின் மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுகுட்டி மற்றும் அதே பகுதியில் கட்டப்பட்ட வளர்ப்பு நாயை கடந்த 5-ந் தேதி மர்மவிலங்கு கடித்து கொன்றது. இதையடுத்து மர்ம விலங்கின் கால்தடங்களை வைத்து ஆராய்ந்ததில் ஆடு, நாயை கொன்றது சிறுத்தைப்புலி என உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே சூரியாம்பாளையத்தில் விவசாயி பழனிவேல் வீட்டில் கட்டியிருந்த ஆடு மற்றும் இருக்கூர் அருகே செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றது. இதையடுத்து வனச்சரகர் பெருமாள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைத்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல் முயற்சி
இதனிடையே அந்தியூரில் இருந்து 6 சிறப்பு பயிற்சி பெற்ற வனக்காவலர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் செஞ்சுடையாம் பாளையம், இருக்கூர் மற்றும் சுண்டப்பனை பகுதிகளில் சிறுத்தைப்புலி வந்து சென்ற வழித்தடங்களை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இக்குழுவினர் சிறுத்தைப்புலியின் எச்சத்தின் மாதிரிகளையும் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓசூரில் இருந்து சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக மேலும் ஒரு கூண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுண்டப்பனை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கால்நடைகளை தொடர்ந்து கடித்து கொன்று வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி திடீரென பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் பரமத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.