ஹார்டுவேர் கடையில் கொள்ளை முயற்சி


ஹார்டுவேர் கடையில் கொள்ளை முயற்சி
x

தா.பழூர் அருகே தனியார் ஹார்டுவேர் கடையின் பூட்டை உடைத்து 2-வது முறையாக திருட முயற்சி செய்த மர்ம நபர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கடையில் பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர்

திருட்டு முயற்சி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமதாஸ் மகன் ராஜ்குமார் (வயது 36). இவர் தா.பழுரை அடுத்த கோடங்குடி கிராமத்தில் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பக்கவாட்டு ஹாலோ பிளாக் சுவர் உடைக்கப்பட்டு இருந்ததும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தா.பழூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார், கொள்ளை முயற்சியின் போது மர்ம நபர்கள் தடயங்கள் எதையாவது விட்டுச்சென்றுள்ளனரா? என்று தீவிர சோதனை செய்தனர். கொள்ளை முயற்சி செய்த கடையில் பணப்பெட்டியில் பணம் எதுவும் வைக்கப்படாததால் கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கடையில் பூட்டை உடைத்து சுமார் ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஆனால் இந்த முறை காப்பர் வயர்கள் கடையில் எதுவும் இல்லாததால் எதுவும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 6 மாதங்களுக்குள் 2-வது முறையாக இந்த கடைக்குள் நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story