டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
பீளமேடு
கோவை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டாஸ்மாக் மதுக்கடை
கோவை அருகே சின்னியம்பாளையம் இருகூர் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை அருகே உள்ள ஸ்டோர் ரூமில் (இருப்பு அறை) வைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கடை ஊழியர் பார்த்தசாரதி என்பவர் மதுபாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டு உள்ள இருப்பு அறையை திறந்து மதுபாட்டில்களை எடுப்பதற்காக சென்றார்.
அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் காணப்பட்டது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கொள்ளை முயற்சி
பின்னர் அவர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கட்டுபாட்டு அறை போலீசார் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள இருப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ள மதுபாட்டில்களை கொள்ளையிட்டு செல்வதற்காக கதவின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்று உள்ளனர்.
ஆனால் அதை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கு இருந்து தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து செல்ல முயன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.