நகை தொழிலாளி வீட்டில் கொள்ளை முயற்சி
விழுப்புரம் அருகே நகை தொழிலாளி வீட்டில் கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே மேல்முத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்(வயது 37). நகை தொழிலாளியான இவர் ஆசாரங்குப்பம் ஏரியில் மீன் குத்தகை ஏலம் எடுத்துள்ளார். இதனால் அவர்கடந்த 10 நாட்களாக அங்குள்ள ஏரி பகுதியில் தங்கியிருந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், செந்தமிழ்செல்வன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயன்றனர். ஆனால் அதை எளிதில் உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் அந்த பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த நகை, பணம் எதுவும் கொள்ளைபோகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இதுகுறித்து செந்தமிழ்செல்வன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.