ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

ஏ.டி.எம்.எந்திரம்

திருப்பத்தூர் டவுன் சின்னகடை தெரு பகுதியில் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு ராடால் உடைக்க முயற்சித்துள்ளார். தான் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க அவர் கண்காணிப்பு ேகமராவையும் உடைத்துள்ளார். அதன்பிறகு எவ்வளவோ முயற்சித்தும் அவரால் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் இருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இந்த நிலையில் அங்கு பணம் எடுக்க வந்தவர் ஏ.டி.எம். மையம் உடைக்கப்பட்டிருந்தது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் அங்கு வந்தபோது ஏ.டி.எம்.எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும், பணம் இருந்த ெபட்டகம் பாதுகாப்பாக இருந்ததையும் பார்த்தனர். ஆனால் கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்ததால் மர்மநபரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை.

கைரேகை நிபுணர்கள் அங்கு உடைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம்.மையம் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

ஆட்டோவில் தப்பினார்

இதுகுறித்து நேரில் பார்த்த நபர் ஒருவர் போலீசாரிடம் கூறுகையில், சில மணி நேரத்துக்கு முன்பு ஏ.டி.எம்.மையத்துக்குள் இருந்து வந்தவர் இரும்பு ராடுடன் ஆட்டோவில் சென்றதாக தெரிவித்தார்.

மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற நபரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது திருப்பத்தூர் அபாய் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஒஸ்தி என்ற ராஜேஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது. கம்பிகட்டும் தொழிலாளியான அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயில் அடைத்தனர்.


Next Story