ஒரேநாளில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

அருப்புக்கோட்டையில் ஒரேநாளில் 2 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் ஒரேநாளில் 2 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளை முயற்சி
அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). இவர் தனது சொந்த தொழில் காரணமாக குடும்பத்துடன் நெல்லை வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டை பூட்டி வைத்து இருந்தார்.
இந்நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து விக்னேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் விைரந்து வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
அதேபோல அதே பகுதியில் உள்ள விஜயலட்சுமி என்பவர் வீட்டிலும் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வீடுகளிலும் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. ஒரேநாள் இரவில் 2 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






