கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை முயற்சி
மேட்டுப்பாளையம் அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.10 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுமுகை
மேட்டுப்பாளையம் அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.10 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் வழியில் வெள்ளிகுப்பம்பாளையத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக ஊட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆனந்த் நேற்று முன்தினம் வழக்கம்போல டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.10 லட்சத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கொள்ளையடிக்க முயற்சி
சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென, விஜய் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் மோதி அவரை கீழே விழ செய்தனர். திடீரென அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் பட்டா கத்தியை எடுத்து விஜய் ஆனந்த்தை மிரட்டினர். மேலும் பணம் வைத்திருந்த விஜய் ஆனந்த்தின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அங்கு வந்தனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு, விஜய் ஆனந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.
வீடியோ வைரல்
இந்த சம்பவம் குறித்து விஜய் ஆனந்த் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.