யூனியன் அலுவலகத்தை முற்றுகை முயற்சி; 34 பேர் கைது
யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் யூனியன் சூரங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம். இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தநிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக மீனாட்சிபுரம், கே.கே.நகர், கே.கே.நகர் கிழக்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த 700 குடும்பங்கள் குடிநீரின்றி அவதி அடைந்து வந்தனர். தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் தலைமையில் ராமநாதபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ், ரமேஷ், நகர் செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யூனியன் அலுவலகத்திற்குள் சென்று முறையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 34 பேரை கைது செய்தனர்.