ஓசூர் வழியாக கோவைக்கு கடத்த முயற்சி: ரூ.8¼ லட்சம் குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல்-டிரைவர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஓசூர் வழியாக காரில் கடத்தப்பட்ட ரூ.8¼ லட்சம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
காரில் குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 19 முட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் வந்த 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் (வயது 30) மற்றும் அவரது நண்பர் தலாரமா (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக கோவைக்கு காரில் குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார், கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிரைவர் சஞ்சீவ்குமார் மற்றும் அவரது நண்பர் தலாரமா ஆகியோரை கைது செய்தனர்.