கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி


கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 29 Jun 2022 1:13 PM IST (Updated: 29 Jun 2022 1:30 PM IST)
t-max-icont-min-icon

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஈரோடு சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

ஈரோடு:

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பெண் புரோக்கர் மாலதியை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் இவருக்கு வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் பெற்ற தாயே தனது வாழ்க்கையை சீரழித்ததால் மனம் உடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சிறுமி கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story