கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயற்சி
x

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்கள் கடைக்குள் அமர்ந்து மது குடித்தபோது போலீசாரிடம் சிக்கினர்.

திருவள்ளூர்

டாஸ்மாக் கடையில் துளை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தண்டலச்சேரி கிராமம். இங்கு உள்ள டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் திருட சென்ற 2 மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவரை கடப்பாரை கொண்டு துளையிட்டு உள்ளே சென்றனர். அங்கு திருடுவதற்கு முன்பாக துளையிட்ட களைப்பு நீங்க ஆசை ஆசையாக அங்கேயே மது குடித்தனர்.

போதை தலைக்கேறிய நிலையில் வந்த வேலையை மறந்து அவர்களுக்குள் அங்கேயே அமர்ந்து சத்தமாக பேசி கொண்டிருந்தனர்.

அங்கு நள்ளிரவில் ரோந்து வந்த போலீசார், கடையின் அருகே பேச்சு சத்தம் கேட்டவுடன் அருகே சென்று பார்த்தனர். அப்போது தான் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு திருட வந்தவர்கள் கடையின் உள்ளே போதையில் பேசிக்கொண்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிபட்டனர்

மது போதையில் இருந்த அவர்களை அந்த துளை வழியாகவே போலீசார் வெளியே வரவழைத்து மடக்கி பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில், டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு உள்ளே புகுந்தவர்கள் பள்ளிகரணையை சேர்ந்த சதீஷ் (34), விழுப்புரத்தை சேர்ந்த முனியன் (32) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த கடையின் விற்பனையாளர்கள் மகாதேவன், பஞ்சாட்சரம், தமிழ்செல்வன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மிரட்டி ரூ.30 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story