சித்தளி அம்மன் கோவிலில் கோபுர கலசங்களை திருட முயற்சி


சித்தளி அம்மன் கோவிலில் கோபுர கலசங்களை திருட முயற்சி
x

சித்தளி அம்மன் கோவிலில் கோபுர கலசங்களை திருட முயற்சி நடந்துள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சித்தளி கிராமத்தில் நல்ல தங்காள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 40 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூசாரி அய்யாசாமி(வயது 62) பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவிலின் பின்புறத்தில் மர்மநபர் மறைந்து இருப்பதை கண்ட அதே பகுதியை சேர்ந்த ரவி(48) என்பவர் சத்தம் போட்டார். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த மர்மநபர் கோவிலுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டு வழியாக தப்பி ஓடி விட்டார். இதையடுத்து ரவி இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பழனிசாமிக்கு(59) தகவல் தெரிவித்தார். பின்னர் பழனிசாமியும், ரவியும் மர்மநபர் ஓடிய திசையில் சென்று பார்த்த போது வயல்காட்டில் கோவிலின் ராஜகோபுரத்தின் 5 கலசங்கள், கருவறை கலசம் ஒன்று, மூலஸ்தான கலசம் ஒன்று, சிறிய அளவிலான 7 பித்தளை மணிகள், ஒரு பெரிய பித்தளை மணி, எண்ணெய் கிண்ணம் 2 ஆகியவை கிடந்தது. இதையடுத்து அந்த கோவில் பொருட்களை தர்மகர்த்தா எடுத்து கோவிலின் மண்டபத்துக்கு கொண்டு வந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குன்னம் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story