கிராம பெண் உதவியாளரை தாக்கி நகை பறிக்க முயற்சி
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே கிராம பெண் உதவியாளரை தாக்கி நகை பறிக்க முயன்ற 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கிராம உதவியாளர்
ஆத்தூர் புதுப்பேட்டை செல்லமுத்து தெருவை சேர்ந்த பாபு மனைவி சங்கீதா (வயது 43). இவர், ராமநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். நேற்று மாலை 6.30 மணி அளவில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். மழை பெய்ததால் அங்கு 10 ஏக்கர் காலனி பகுதியில் ஒதுங்கி நின்றார். அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (22), மோகன்ராஜ் (28) ஆகியோர் சங்கீதா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்து சங்கீதா கூச்சலிட்டார்.
தர்மஅடி
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து குருமூர்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை ஆத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். நகை பறிப்பு முயற்சியின் போது காயம் அடைந்த சங்கீதா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பிடித்து கொடுத்த 2 பேரிடமும் ரூரல் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விசாரணை நடத்தினார்.