தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:46 PM GMT)

கடலூரில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடலூர்

கடலூர் புதுப்பாளையம் மணலி எஸ்டேட்டை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தேவி (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தார்.

பின்னர் தேவியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றார். அப்போது திடீரென கண்விழித்து பார்த்த தேவி, வாலிபர் தாலி செயினை பறிக்க முயன்றதை பார்த்து பதறினார். உடனே அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

அப்போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதில் சத்தம் கேட்டு எழுந்த வேலு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தார்.

கைது

பின்னர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில், வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story