மனைவியை அபகரித்ததால் நண்பரை மதுபாட்டிலால் குத்திக்கொல்ல முயற்சி
மனைவி மற்றும் குழந்தைகளை அபகரித்ததால் நண்பரை மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
ரவுடி
சென்னையை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 28). இவர், மயிலாப்பூர் சாய்பாபா கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய நண்பர் சதீஷ் என்ற ஒல்லி சதீஷ் (31). இவர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். ரவுடி ஆவார். இவர் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சதீஷ் அடிக்கடி வழக்கில் சிக்கி சிறைக்கு போய் விடுவார்.
இதனால் 3 குழந்தைகளுடன் வாழ்வாதாரத்துக்கு தவித்த சதீஷின் மனைவி, ஆறுமுகத்திடம் தஞ்சம் அடைந்தார். பின்னர் ஆறுமுகத்தோடு வாழ ஆரம்பித்ததாக தெரிகிறது.
மதுபாட்டிலால் குத்தினார்
இந்த நிலையில் சதீஷ் அழைத்ததன்பேரில் ஆறுமுகம், நேற்று முன்தினம் இரவு அவரை சந்தித்தார். மயிலாப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சதீசும், ஆறுமுகமும் சேர்ந்து மது அருந்தினார்கள். பின்னர் சதீஷ் திடீரென்று, காலி மதுபாட்டிலை உடைத்து, ஆறுமுகத்தின் மீது சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் ஆறுமுகம் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்து விட்டார். உயிருக்கு போராடிய அவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சதீஷ் தப்பி ஓடிவிட்டார்.
மனைவியை அபகரித்ததால்...
இது தொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சதீஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தனது மனைவி, குழந்தைகளை அபகரித்து கொண்டதாக நண்பரான ஆறுமுகம் மீது சதீஷ் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. அதனால், மது அருந்த அழைத்து, பின்னர் ஆறுமுகத்தை மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் சதீஷ் கைது செய்யப்பட்டார்.