கண்மாயில் கழிவுகளை கொட்ட முயற்சி; டிராக்டர் பறிமுதல்
கண்மாயில் கழிவுகளை கொட்ட முயற்சி செய்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் காலாங்கரை கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் அருகில் தற்போது அதிக அளவில் வீடுகள் மற்றும் கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்படும் கட்டிட கழிவுகளை இங்கு சிலர் கொட்டி வந்தனர். இதனால் கண்மாயின் அளவு சுருங்கி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதனிடம் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் எடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கண்மாய் பகுதியில் ஒரு டிராக்டர் கழிவுகளுடன் நின்று கொண்டு இருப்பதாக தாசில்தார் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தார். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க கண்மாய் பகுதிகளில் கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.