353 வாகனங்கள் ரூ.18¾ லட்சத்துக்கு ஏலம்


353 வாகனங்கள் ரூ.18¾ லட்சத்துக்கு ஏலம்
x

கிருஷ்ணகிரியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 353 வாகனங்கள் ரூ.18¾ லட்சத்துக்கு ஏலம் போனது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்திய தண்டனை சட்டம், 102-வது பிரிவில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் அறிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 353 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என 356 வாகனங்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன. மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசு, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி அரசு தானியங்கி பொறியாளர் பழனிவேலு, அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி கிளை மேலாளர் அரசபாபு, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், பர்கூர் துணை தாசில்தார் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்பு ஏலம் விடப்பட்டது. 3 நான்கு சக்கர வாகனங்களை தவிர, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன் மூலம் ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 600 கிடைத்தது.


Next Story