சாராயம் விற்பனை செய்ய ரூ.11 லட்சத்துக்கு ஏலம்

கல்வராயன்மலையில் சட்டத்தை மீறி சாராயம் விற்பனை செய்ய ரூ.11 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டி போட்டு ஏலம் எடுத்த சாராய வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த கல்வராயன்மலை மற்றும் அதன் அடிவார பகுதியில் சட்டத்தை மீறி பல இடங்களில் சாராயம் காய்ச்சும் தொழில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு காய்ச்சப்படும் சாராயம் திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர கல்வராயன்மலை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதற்கு ஏலமும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.இதில் ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே அந்தந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டும் பலனில்லை.
ரூ.11 லட்சத்துக்கு ஏலம்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனைமடுவுவில் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரு வருடத்திற்கு சாராயம் விற்பனை செய்வதற்கான உரிமத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதில் சாராய வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். முடிவில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சாராயம் விற்பனை செய்ய ரூ.11 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். இதையடுத்து அவர் ஒரு சில மணி நேரங்களிலேயே ஆனைமடுவு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சாராயம் விற்பனை செய்ய ஏலம் எடுத்தவரை வடபொன்பரப்பி போலீசார் வலைவவீசி தேடி வருகின்றனர்.
கோவில் சீரமைப்பு
இதனிடையே கடந்த 5 நாட்களுக்கு முன்பு சாராயம் விற்பனை செய்வதற்காக மல்லாபுரம் பகுதியில் ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் கிடைத்த பணம் மூலம் அங்குள்ள கோவிலை சீரமைக்க கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கல்வராயன்மலை பகுதியில் சாராய விற்பனைக்கு ஏலம் விடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.