ஆலிச்சிக்குடிசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழாபக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்


ஆலிச்சிக்குடிசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழாபக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

ஆலிச்சிக்குடி சுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே ஆலிச்சிக்குடி சுப்பிரமணியர் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி திருவிழா நடந்தது. முன்னதாக காலையில் பக்தர்கள் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேல், மயில் காவடி, செடல் காவடி, அருகண்டன் காவடி எடுத்தும், அலகு அணிந்து, பால்குடம், தீச்சட்டி எடுத்துக்கொண்டு சக்தி கரகத்துடன் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதி, கடைவீதி வழியாக ஆலிச்சிக்குடி சுப்பிரமணியர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுப்பிரமணியரை பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




Next Story