'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ பிரசாரம்


ஸ்பீக்கிங் பார் இந்தியா என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ பிரசாரம்
x

‘ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் பேசியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். தி.மு.க. 75-வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி. அண்ணா, கருணாநிதி என இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் நாங்கள். இப்போது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

2024-ம் ஆண்டில் முடியப்போகிற பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்து இருக்கிறார்கள்? எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும்? என்று ஒரு ஆடியோ வடிவில் பேசப் போகிறேன். அதுக்கு 'ஸ்பீக்கிங் பார் இண்டியா' என்ற தலைப்பு வைத்துக் கொள்ளலாமா? தெற்கில் இருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்.

இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

இதற்கிடையில் தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல் ஆகியவை உள்ளதே இணையற்ற இந்தியா.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையெல்லாம், பலவகைப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவை உருக்குலைக்கும் நச்சு கருத்துகள். குமரி முதல் இமயம் வரையிலான பரந்து விரிந்த இந்திய நாட்டை காப்பாற்றும் கடமை நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது என்ற நோக்கோடு, பா.ஜ.க. ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்தியும், பன்முகத்தன்மை கொண்ட, வலுவான மாநிலங்கள் கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவை காப்பாற்றுவது குறித்தும், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் குரல் பதிவுத் தொடர் வடிவில், 'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story