சாட்சிகளிடம் ஆடியோ-வீடியோ முறையில் விசாரணை- தென்மண்டல ஐ.ஜி.யின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு


சாட்சிகளிடம் ஆடியோ-வீடியோ முறையில் விசாரணை- தென்மண்டல ஐ.ஜி.யின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு
x

சாட்சிகளிடம் ஆடியோ-வீடியோ முறையில் விசாரணை நடத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்காக போலீஸ் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டினார்.

மதுரை


சாட்சிகளிடம் ஆடியோ-வீடியோ முறையில் விசாரணை நடத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்காக போலீஸ் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டினார்.

சிறப்பான நடவடிக்கை

விருதுநகரை சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2018-ம் ஆண்டில் என் மீது முதுகுளத்தூர் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்தேன். ஆனால் அந்த வழக்கின் இறுதி அறிக்கையை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்ததாக கூறியதால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்து விசாரித்தபோது, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பது தெரிந்தது. கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த முதுகுளத்தூர் போலீசார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வழக்கு விசாரணை நடைமுறைகளில் சிறப்பான நடவடிக்கைகளை தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் அமல்படுத்தியுள்ளார். கொலை வழக்கு, போக்சோ வழக்கு, வகுப்பு கலவரம் உள்ளிட்ட விசாரணையை கண்காணித்து தண்டனை பெற்றுத் தரும் வகையிலும், கண்காணிப்பு அதிகாரியையும் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பதிவு செய்வது முக்கியம்

சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ-வீடியோ முறையில் பதிவு செய்வது முக்கியமானது. இதற்காக போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதை அமல்படுத்தியுள்ளார். இதனால் உயர் அதிகாரிகளின் பணி அதிகரிக்கும். ஆனால் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிச்செல்ல முடியாது. தென் மண்டலத்தில் கடந்த மாதம் வரை 1,44,451 வழக்குகள் விசாரணை நிலுவை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 65.77 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன.

எனவே தென் மண்டல ஐ.ஜி.யின் அறிக்கை அடிப்படையில் மாவட்டந்தோறும் கோர்ட்டு வாரியான அறிக்கையை அந்தந்த முதன்மை மாவட்ட நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.


Next Story