சென்னையில் ஆகஸ்டு 15-ந் தேதி சத்தியாகிரக போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு


சென்னையில் ஆகஸ்டு 15-ந் தேதி சத்தியாகிரக போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
x

விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சென்னையில் ஆகஸ்டு 15-ந் தேதி சத்தியாகிரக போராட்டம் தொடங்கும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

வன்முறையாக சித்தரிக்க முயற்சி

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பரவனாறில் புதிய ஆறு வெட்டுவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் நிலங்களை கையகப்படுத்தியதாக கூறி திடீரென ராட்சத எந்திரங்களைக் கொண்டு, நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு பள்ளி மாணவர்களை எல்லாம் சிறையில் அடைத்திருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்க முயற்சிக்கப்படுகிறது.

என்.எல்.சி. நிறுவனத்துக்கு துணையா?

மாவட்ட கலெக்டரும், நிதி அமைச்சரும் சொல்வது போல் பத்தாண்டுகளாக கைப்பற்றப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் என்ன நோக்கத்துக்காக கைப்பற்றப்பட்டதோ, அந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகளை கடந்தால் அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சட்டவிரோதமாக தமிழ்நாடு அரசு சுயநல நோக்கோடு என்.எல்.சி. நிறுவனத்துக்கு துணைபோகிறதோ என்று அஞ்ச தோன்றுகிறது.

மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு டெண்டர் விட்டுள்ள நிலையில், இந்த பணியை வேகப்படுத்துவதின் நோக்கம் என்ன? இந்த செயல், ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு புறம்பானது மட்டுமல்ல, நீதிபதியின் கருத்தை அவமதிக்கும் செயலும் ஆகும்.

சத்தியாகிரக போராட்டம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கொடுப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். மூன்றாண்டு கடந்த நிலையில் உரிய விலை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.

தொழிற்சாலைகள் அமைப்பதற்கு விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதால், தற்போது வெளிநாடுகளில் ஏற்பட்டிருப்பதைப் போல எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் அரிசி தட்டுப்பாடு உருவாகும். எனவே வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி தமிழ்நாடு அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தை சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story