ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தீர்வு காணவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தீர்வு காணவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தீர்வு காணவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருமண்டங்குடியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மோசடியை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 மாதங்களை கடந்து போராட்டம் நீடிக்கும் நிலையில், இந்த சிக்கலை தீர்க்க தமிழக அரசின் சார்பில் இதுவரை பயனளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மோசடியால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து வரும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது. இதேநிலை இப்படியே தொடருவதை அரசு அனுமதிக்கக்கூடாது.

மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக தொழில்துறை செயலாளர் முன்னிலையில் இத்தகைய பேச்சுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அது ஒன்று தான் இந்த சிக்கலுக்கு தீர்வை வழங்கும்.

எனவே, அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். விவசாயிகளின் பெயர்களில் ஆரூரான் சர்க்கரை ஆலையில் பழைய நிர்வாகம் வாங்கிய கடன்களை புதிய நிர்வாகமே ஏற்றுக்கொள்வதற்கும், விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்கவேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் பெற்றுத் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story