சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு தடை விதிக்க வேண்டும்: உடன்குடி வியாபாரிகள் கோரிக்கை


சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு  தடை விதிக்க வேண்டும்: உடன்குடி வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உடன்குடி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களில் பிளாஸ்டிக் வெற்றிலையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உடன்குடி சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வியாபாரிகள் சங்க கூட்டம்

உடன்குடி வெற்றிலை விவசாய சங்கத்தின் 70-ஆவது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் சங்க வளாகத்தில் நடந்தது. முத்த உறுப்பினர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர்கள் திருநாதன், தங்கத்துரை, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சங்க செயலாளர் மங்களராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

பின்பு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக மகாராஜன், செயலாளராக மங்கள்ராஜ், பொருளாளராக சற்குணராஜ் மற்றும் 18 நிர்வாக குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தாம்பூலக்கவரில் வெற்றிலை

கூட்டத்தில், அனைத்து தரப்பு மக்களும் தாம்பூலக்கவரில் கண்டிப்பாக வெற்றிலையை பயன்படுத்த வேண்டும். சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களில் பிளாஸ்டிக் வெற்றிலை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மருத்துவ குணம் கொண்ட வெற்றிலையை சங்க உறுப்பினர்கள், வீடுகளில் உள்ள காலி இடத்தில் வளர்க்க வேண்டும். மருத்துவ குணம்கொண்ட வெற்றிலையை அனைத்து சுப நிகழ்சிகளிலும், கோவில் திருவிழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story