காவல் துணை ஆணையர்களுக்கு வழங்கிய அதிகாரம் செல்லாது - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கிப்பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை,
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களிடமிருந்து காவல்துறையினர் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என்று நன்னடத்தை பிரமாணம் என்பதை பெறக்கூடிய நடைமுறை உள்ளது. இந்த நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைப்பதற்கு காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு 2013-14 ம் ஆண்டுகளில் இரண்டு அரசாணைகளை பிறப்பித்தது.
இதன்படி நன்னடத்தை பிரமாணத்தை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தங்களை சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் இரு வேறு நீதிபதிகள் இரு வேறு விதமாக தீர்ப்பளித்ததனால் இது தொடர்பான சட்ட கேள்விக்கு விடை காண்பதற்காக நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட இரண்டு அரசாணைகளும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை என்று அறிவித்திருக்கிறது. மேலும் நீதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடைய அதிகாரத்தை காவல்துறையினர் பயன்படுத்த முடியாது என்றும் அந்த அடிப்படையில் இந்த இரண்டு அரசாணைகளும் அமலுக்கு வருவதற்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கின்றனர்.
நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் கோர்ட்டுகள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளனர்.