தம்பதியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் தம்பதியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வால்பாறை
வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் தம்பதியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன்விரோதம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோணி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்வி(வயது 47). தேயிலை தோட்ட தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த வாலிபரின் நண்பரான வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுதீஷ்குமார்(39), செல்வியை சந்தித்து தனது நண்பரிடம் விரோதத்தை வளர்க்கக்கூடாது என்றுக்கூறியதாக தெரிகிறது.
தாக்குதல்
இந்த நிலையில் செல்வி தனது கணவருடன் நகராட்சி மார்க்கெட் பகுதிக்கு வந்திருந்தார்.
அப்போது அங்குள்ள பொது இடத்தில் அவர்களை சந்தித்த சுதீஷ்குமார் திடீரென தகராறில் ஈடுபட்டார். மேலும் இனிமேல் தனது நண்பரிடம் விரோதத்தை வளர்த்து வந்தால் அவர்கள் 2 பேரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதோடு தாக்கியதாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார்.
அதன்பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, சுதீஷ்குமாரை கைது செய்தனர்.