முன்விரோதத்தில் பெயிண்டரின் மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது


முன்விரோதத்தில் பெயிண்டரின் மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது
x

முன்விரோதத்தில் பெயிண்டரின் மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

தகராறு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கன்னிக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரத்தினவேல் (வயது 55). பெயிண்டர். இவர் தனது மனைவி ஜோதி மற்றும் மகளுடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

காட்ரோடு அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மாதேஷ்(47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது ரத்தினவேல் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அருகில் உள்ளவர்கள் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ டிரைவர் கைது

இந்நிலையில் நேற்று இரவு மாதேஷ் மற்றும் அவரது மகன்கள் விஜய் (25), மணிகண்டன் (28) ஆகியோர் கன்னிக்கோவில் பகுதியில் உள்ள ரத்தினவேல் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளனர். அப்போது விஜய் இரும்பு கம்பியால் ரத்தினவேல் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்தினவேலை அக்கம்பக்கத்தினர் திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுக்குறித்து ரத்தினவேலின் மனைவி ஜோதி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவரான விஜயை போலீசார் கைது செய்தனர். மாதேஷ் மற்றும் மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story