ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
தக்கலை:
தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் சுஜின்தாஸ் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனில் அழைத்த நபர் சவாரி வர வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அந்த நபர் அழைத்த இடத்திற்கு சுஜின்தாஸ் சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் 5 நபர்கள் ஏறினர். பின்னர், கோழிப்போர்விளை நான்கு வழிச்சாலை பாலம் அருகில் சென்றபோது ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு மேலும் 5 மர்ம நபர்கள் வந்து அனைவரும் ஒன்று சேர்ந்து சுஜின்தாசை தாக்கி, ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கி விட்டு ரூ.9 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுஜின்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் மர்மநபர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.