அருவி பாறை இடுக்கில் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி

அடவிநயினார் அணை பகுதியில் அருவி பாறை இடுக்கில் சிக்கி ஆட்டோ டிரைவர் பலியானார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது மசூது (வயது 32). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேக்கரை அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வரும் அருவியில் குளிக்க சென்றார்.
132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு குட்டையாக காட்சியளித்தது. தற்போது பெய்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 94 அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்கள், அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக வருகிறது.
செய்யது மசூது நண்பர்களுடன் அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வரும் அருவியில் குளிக்க சென்றார். அப்போது பாறை இடுக்கில் சிக்கிய செய்யது மசூது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசாருக்கும், செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பாறை இடுக்கில் சிக்கி இறந்த செய்யது மசூதுவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






