திருவாரூர் கமலாலய குளத்தில் ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்பு


திருவாரூர் கமலாலய குளத்தில் ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்பு
x

திருவாரூர் கமலாலய குளத்தில் மூழ்கிய ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்.

திருவாரூர்

திருவாரூர்:-

திருவாரூர் கமலாலய குளத்தில் மூழ்கிய ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்.

கமலாலய குளம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடந்தது. தெப்பத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திருவாரூர் ரெயில்வே காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (வயது48) என்பவர் கமலாலய குளத்தின் நடுவே உள்ள நாகநாதசாமி கோவிலுக்கு நீச்சல் அடித்து சென்றார்.

கோவிலை சென்றடைவதற்கு சற்று தூரத்துக்கு முன்பு வெங்கடேசன் திடீரென குளத்தில் மூழ்கினார். இதை அறிந்த திருவாரூர் தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் குளத்தில் இறங்கி வெங்கடேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குளத்தில் மூழ்கி இறந்த சிறுமி

அப்போது பலூன் விற்பனை செய்ய வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி முஸ்கான் உடல் குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி, குளிப்பதற்காக குளத்தில் இறங்கியபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

குளத்தில் மூழ்கிய ஆட்டோ டிரைவரை தேடிய போது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆட்டோ டிரைவரை தேடும் பணி தொடர்ந்து நடந்தது.

ஆட்டோ டிரைவர் சாவு

நேற்று மாலை 4 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் தேடிக்கொண்டிருந்தபோது வெங்கடேசன் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. குளத்தில் மிதந்த அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் திருவாரூர் டவுன் போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story