ஓசூரில் கடத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆந்திராவில் மீட்பு
ஓசூரில் கடத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆந்திராவில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:-
ஓசூரில் கடத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆந்திராவில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர்
ஓசூர் தாலுகா புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஓசூர் ராம்நகரில் உள்ள அவரது உறவினர்கள் கிரி மற்றும் கார்த்திக் ஆகியோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி, தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.
ஓசூரில் ராயக்கோட்டை கூட்டு ரோடு அமீரியா பெட்ரோல் பங்க் அருகில் சென்ற அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாங்கள் வந்த வாகனத்தில் கடத்தி சென்றனர். சீனிவாசன், தனது உறவினர்கள் கிரி, கார்த்திக்கிற்கு செல்போன் மூலம் விவரத்தை கூறி, தன்னை யாரோ 3 பேர் கடத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
ஆந்திராவில் மீட்பு
இதன்பிறகு சிறிது நேரத்தில் சீனிவாசன் தனது மகள் சந்தியாவிற்கு வாட்ஸ் அப்பில் தன்னை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்தி செல்வதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவரது மனைவி பத்மாவதி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் சீனிவாசனின் செல்போன் எண்ணை வைத்து பார்த்த போது அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.
அந்த பகுதியில் தனியாக நின்ற சீனிவாசனை போலீசார் மீட்டனர். போலீசார் விசாரணையின் போது சீனிவாசன் தன்னை 3 பேர் கடத்தி வந்து தப்பி ஓடி விட்டதாகவும், மற்றொரு முறை தான் எப்படி வந்தேன் என தெரியவில்லை என முன்னுக்கு பின் முரணாக கூறுகிறார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.