கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
ராமேசுவரத்தில் கியாஸ் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரத்தில் கியாஸ் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோக்கள்
ராமேசுவரம் பகுதியில் புதிய சி.என்.ஜி. (கியாஸ்) ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி வழங்குவதை கண்டித்தும், உடனடியாக அந்த உத்தரவை நிறுத்த வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களும் இணைந்து நேற்று ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் செந்தில்வேல், செந்தில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் போலீசார் 10 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் மட்டும் கலெக்டரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி வழங்கினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டரை சந்தித்த ஆட்டோ சங்க குழுவினர் ராமேசுவரத்தில் ஏற்கனவே 500-க்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடி வருவதாகவும், அதனால் மேலும் ஆட்டோக்களுக்கு புதிய அனுமதி எதுவும் வழங்கக்கூடாது, அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
நடவடிக்கை
அப்போது மாவட்ட கலெக்டர், ராமேசுவரத்தில் ஓடும் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களை சி.என்.ஜி. ஆட்டோக்களாக மாற்றுவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் புதிய பெர்மிட் வழங்குவது நிறுத்தி வைப்பது குறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதுகுறித்து இரண்டு நாட்களில் அனைத்து ஆட்டோ சங்க டிரைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கலெக்டரின் உத்தரவை பின்பற்றுவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.