ஆட்டோ டிரைவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


ஆட்டோ டிரைவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x

திருப்பத்தூர் அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவரின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்தனர்.

திருப்பத்தூர்

ஆட்டோ டிரைவர் சாவு

திருப்பத்தூரை அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் என்ற செல்வராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஞானசவுந்தரி (32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். உதயசூரியன் கடந்த 4-ந் தேதி மாலை குரும்பகேரி புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஞானசவுந்தரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அழைத்து செல்லுமாறு செவிலியர்கள் கூறியதால் அரசு மருத்துவமனையில் இருந்து ஞானசவுந்தரி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்

அதன் பின்னர் உடல்நிலை கவலைக்கிடமானதை உணர்ந்த ஞானசவுந்தரி திரும்பவும் உதயசூரியனை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி அவரது உடலை புதைத்தனர்.

சாவில் சந்தேகம்

பின்னர் உதயசூரியன் மனைவி கடந்த 7-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். அதில் ஒருவர் ஆட்டோ வாங்கியதன் காரணமாக கறி விருந்து வைப்பதற்காக உதயசூரியன் மற்றும் ஒருவர் சென்றனர். உதயசூரியன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆட்டோ வாங்கியவருக்கும், உதயசூரியனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. மேலும் அதேப் பகுதியில் ஒருவரை, நான்கு பேர் அடித்து உதைத்ததாக ஏரி வேலை செயதவர்கள் தெரிவித்தனர். எனவே எனது கணவர் உதயசூரியன் சாவில் சந்தேகம்உள்ளது. அவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து உண்மை நிலவரத்தை அறிய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

உடல் தோண்டி எடுப்பு

இது தொடர்பாக திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் உதயசூரியனின் உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவர் ஸ்ரீராம் மருத்துவ குழுவினரால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வாகன விபத்தில் இறந்தாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். பிணத்தை தோண்டு தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story