ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்


ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்
x

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சிவப்பு சிக்னலை தாண்டி சென்றதை கண்டித்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணன் (வயது 56). இவர், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சிக்னலில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ, சிவப்பு விளக்கு விழுந்த பிறகும் சிக்னலை கடந்து செல்ல முயன்றது. இதை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி, போக்குவரத்து விதியை மீறியது குறித்து கண்டித்தார்.

ஆட்டோவில் போதையில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர், "எங்கள் ஆட்டோவை எப்படி நீ தடுக்கலாம்" எனக்கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் அணிந்திருந்த முக கவசத்தை கிழித்து எரிந்ததுடன், அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் பொதுமக்கள் முன்னிலையில் தன்னை தாக்கி அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஏழு கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர்களான தண்டையார்பேட்டை சேர்ந்த ராமதுரை (34), மாதவரத்தை சேர்ந்த ஜெகன் (28), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story