ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகராறு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 2 ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு முன்பாக அவர்களது சமூகத்தை சேர்ந்த ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையை வைத்து ஆட்டோவை நிறுத்தியுள்ளனர்.
நேற்று காலை ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்த ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரின் பெயர் பலகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து இரு சமூகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதனைதொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்தால் பிரச்சினை ஏற்படும். எனவே ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதாக தற்போது பேனர் வைத்துள்ள சமூகத்தினரை மற்றொரு இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துக் கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.
போலீசார் கண்காணிப்பு
இதையடுத்து இரு சமூகத்தினரும் பஸ் நிலையத்தில் வெவ்வேறு இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் வைத்துக் கொள்வது குறித்து பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என போலீசார் மற்றும் அதிகாரிகள் கூறியதையடுத்து இரு சமூகத்தினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலைய பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிக்கும்
இந்த சம்பவம் குறித்து ஒரு சமூகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 26 ஆட்டோக்களை வைத்து கிழக்கு, மேற்கு என இருபுறமும் பஸ் நிலைய ஓரத்தில் பிழைப்பு நடத்தி வருகிறோம். இதில் சவாரி இல்லாத நேரத்தில் எங்களுக்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பஸ் நிலையத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோவை நிறுத்தினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும். எனவே அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சைக்கிள் ரிக்ஷா
இதுகுறித்து மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ரிக்ஷா மூலம் பயணிகளை அழைத்து சென்று வந்தோம். தற்போது சைக்கிள் ரிக்ஷாவுக்கு மவுசு குறைந்ததால் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ஆட்டோ ஓட்ட முடிவு செய்துள்ளோம். எனவே எங்களையும் பஸ் நிலையத்திற்குள் சவாரி ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்றனர்.