பாவூர்சத்திரத்தில் ஆட்டோ பிரசாரம்


பாவூர்சத்திரத்தில் ஆட்டோ பிரசாரம்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:46 PM GMT)

தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து பாவூர்சத்திரத்தில் ஆட்டோ பிரசாரம் நடந்தது

தென்காசி

பாவூர்சத்திரம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தென்காசிக்கு வருகையையொட்டி பாவூர்சத்திரத்தில் ஆட்டோ பிரசாரம் நடந்தது. பஸ்நிலையம் அருகில் தொடங்கிய இந்த பிரசாரத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, ஆட்டோ பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மேலும் பஸ்நிலையத்தில் பயணிகள், பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் வருகை குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தென்காசிக்கு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக வருகிறார். சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலில் தென்காசி ெரயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு வந்து இறங்குகிறார். ெரயில் நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நடுபல்க், பழைய பஸ் நிலையம், மேலகரம் வழியாக குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். இந்த வழிகளில் 100 பேர் கொண்ட செண்டை மேளம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், வாடிப்பட்டி மேளம் மற்றும் பறையாட்டம் ஆகியன நடைபெறுகிறது.

சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் சுமார் 9 மணிக்கு மேல் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு காசிமேஜர்புரம், டிரிஜில் ஓட்டல், வல்லம் சிலுவை முக்கு, செங்கோட்டை ஆர்ச், குண்டாறு பாலம், சுப்பிரமணியபுரம், கணக்கப்பிள்ளை வலசை வழியாக விழா நடைபெறும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்திற்கு வந்து சேருகிறார். இந்த வழிப்பாதையிலும் காளையாட்டம், பறையாட்டம், கரகாட்டம், இசை கச்சேரி, பொம்மலாட்டம், செண்டை மேளம், சிவன் பார்வதி ஆட்டம், தவில், நாதஸ்வரம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் பிறகு வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சுமார் 1 லட்சத்திற்கும் மேலான பயனாளிகளுக்கு வழங்கி பேசுகிறார்.

விழாவிற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க தென்காசி மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் அனைவரும் வரவேற்க திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story