சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்


சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

விதிமீறல்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மட்டுமே சரக்கு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பிட்ட எடை மற்றும் உயர, அகலத்துக்கு மேல் பாரம் ஏற்றக் கூடாது, ஆட்களை ஏற்றக் கூடாது என பல்வேறு விதிமுறைகள் உள்ளது.ஆனால் சரக்கு வாகனங்களில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் அலட்சியப்போக்கு தொடர்கிறது. குறிப்பாக மடத்துக்குளம் பகுதியில் திருமணம், காதுகுத்து, கோவில் திருவிழா போன்ற விசேஷங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் பயணிகள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது மிகச்சாதாரண நிகழ்வாக உள்ளது. அதிலும் குழ்நதைகள், பெண்கள் என அதிக எண்ணிக்கையில் சரக்கு வாகனங்களின் பின்புறம் பாதுகாப்பற்ற முறையில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர்.

மேலும் ஏராளமான கூலித்தொழிலாளர்களின் பயண வாகனம் சரக்கு வாகனமாகவே உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கூலித்தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில், ஏஜெண்டுகள் மூலம் சரக்கு வாகனங்களில் கூலித்தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

விபத்துகள்

பல கிராமங்களில் அரசுத்திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்துக்கான பயனாளிகளையே பணி நடைபெறும் இடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

மேலும் சரக்கு வாகனங்களில் தேங்காய், மண், செங்கல், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில், அந்த பொருட்களின் மீதே ஆபத்தான நிலையில் அமர்ந்து தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். இவ்வாறு சரக்கு வாகனங்களில் அலட்சிய பயணம் மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி அதன் மீது அமர்ந்து பயணம் செய்தால் மின் கம்பிகளில் உரசி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், வேறு வழியில்லாத நெருக்கடியாலும் பல தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயணிகள் வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் போது சற்று கூடுதல் செலவு பிடிக்கலாம். ஆனால் ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது என்பதை உணர்ந்து கூடுதல் செலவினங்களை ஏற்றுக் கொள்வதும், சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்ப்பதும் அவசியமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story