ஆவடி ரெயில் நிலையம் அருகே சோகம்: எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் உட்பட இருவர் பலி
ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் உட்பட இருவர் பலியாகினர்.
ஆவடி,
ஆவடி ரெயில் நிலையம் அருகே இரவு 9:30 மணிக்கு பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது. அந்த நேரத்தில் ஆவடி பஸ் நிலைய மார்க்கத்தில் இருந்து மார்க்கெட் பகுதி நோக்கி பொதுமக்கள் சிலர் வந்தனர். அதில் ஒரு பெண் போலீசும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் வரை நின்று கொண்டிருந்த பொதுமக்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதும் உடனடியாக அந்தப் பக்கம் கடந்து செல்வதற்காக முற்பட்டனர். அப்பொழுது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென வந்தது.
இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் சிலர் அப்படியே நின்று விட்டனர். ஆனால் ஒரு ஆண், ஒரு பெண், சிறுவன் உட்பட 3 பேர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதற்குள் சென்றுவிடலாம் என்று முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் கடந்து செல்வதற்குள் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து அவர்கள் மீது மோதியது. இதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ஆண் மற்றும் பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரெயில்வே போலீசார் சிறுவனை மீட்டு ஆம்புலன்சில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த ஆண், பெண் குறித்த விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.