கிலோ ரூ.60-க்கு கிடைக்கிறது: 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது


கிலோ ரூ.60-க்கு கிடைக்கிறது: 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது
x

பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் மேலும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதத்தில் தக்காளி விலை 'கிடுகிடு'வென உயர தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து, ஒரு கட்டத்தில் ரூ.100-ஐ எட்டி சதம் அடித்தது.

தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும் தக்காளி விலை பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது. மொத்த மார்க்கெட்டை காட்டிலும், வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் பொதுமக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாக தக்காளியை ரூ.60-க்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியது. பின்னர் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. அந்தவகையில் சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் 1 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

300 ரேஷன் கடைகள்

இதற்கிடையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் இன்னும் கூடுதலாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மேலும் 300 ரேஷன் கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் தலா 1 கிலோ தக்காளி வழங்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க கடைகள் உள்பட சென்னையில் மட்டும் 85 கடைகளில் கூடுதலாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி முதலில் வரும் 50 முதல் 100 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, பின்னர் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் இல்லை. ரேஷன் கார்டும் தேவையில்லை. இதனால் மக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று பணத்தை கொடுத்து தக்காளி வாங்கி சென்றனர்.

உறுதியான நடவடிக்கைகள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கூடுதலாக 300 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனையை தொடங்கியிருப்பது நல்ல நடவடிக்கை. அதேவேளை தக்காளி விலையை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு கையாள வேண்டும்' என்று தெரிவித்தனர்.

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகப்படுத்தவும், நடமாடும் காய்கறி அங்காடிகளை தேவைப்படும் இடங்களில் தொடங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, உரிய நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story