இருக்கு...ஆனால் செயல்பாட்டில் இல்லீங்க...


இருக்கு...ஆனால் செயல்பாட்டில் இல்லீங்க...
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இருக்கு...ஆனால் செயல்பாட்டில் இல்லீங்க....

கோயம்புத்தூர்

தென்னக ரெயில்வேயில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தான் அதிக வருமானம் ஈட்டித்தருகிறது.

கோவை ரெயில் நிலையம் வழியாக தினமும் சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், ராமேசுவரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. தொழில் நகரமான கோவையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

அவர்கள் திருவிழா, பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல ரெயிலையே பயன்படுத்துகிறார்கள். இதனால் கோவை ரெயில்நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதும். அதுவும் பண்டிகை காலங்களில் பல மடங்கு கூட்டம் இருக்கும்.

இருக்கு...ஆனால் இல்லீங்க

இந்தநிலையில் முன்பதிவு செய்து ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக கோவை ரெயில்நிலையத்தின் முதல் தளத்தில் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 7 டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளன. ஆனால் தற்போது இங்கு 2 டிக்கெட் கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால் இருக்கு...ஆனால் செயல்பாட்டில் இல்லீங்க என்கிற நிலைதான் உள்ளது.

இதனால் அங்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் நீண்டநேரம் காத்து இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதனால் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் மூடிக்கிடக்கும் முன்பதிவு கவுண்ட்டர்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

தனிக்கவனம்

கோவை ரெயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உள்ள 7 டிக்கெட் கவுண்ட்டர்களில் 2 கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் முன்பதிவு செய்ய வந்தவர்களின் கூட்டமும் அதிகளவு இருக்கிறது.

இதனால் கால்கடுக்க நின்று டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக ஒரு கவுண்ட்டர் அல்லது 2 கவுண்ட்டர்களை திறந்து போதிய பணி ஆட்களை நியமித்து பயணிகளுக்கு உதவிட வேண்டும். பெண்களுக்கு என்று தனியாக ஒரு கவுண்ட்டர் திறந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். எப்போதும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முடிவதில்லை. கோவை ரெயில்நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தினைதான் நம்பித்தான் பலர் உள்ளனர். மேலும் முதியோர்களுக்கு என்று தனிக்கவனம் செலுத்தி கோவை ரெயில்நிலையத்தின் முன்பதிவு மையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் ஒன்று செயல்படுத்த வேண்டும். அங்கு முதியோர்கள் வரவில்லையென்றால் பிறருக்கு முன்பதிவு பயணச்சீட்டு கொடுக்கலாம். இதன் மூலம் முதியோர் காத்து நிற்பதால் ஏற்படும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும். மேலும் விரைந்து முன்பதிவு செய்யவும் இயலும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story