ஆவணி மூல திருவிழா: மானூரில் கருவூர் சித்தருக்குநெல்லையப்பர் காட்சியளித்தார்


ஆவணி மூல திருவிழா: மானூரில் கருவூர் சித்தருக்குநெல்லையப்பர் காட்சியளித்தார்
x

ஆவணி மூல திருவிழாவில் மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளித்தார்.

திருநெல்வேலி

மானூர்:

ஆவணி மூல திருவிழாவில் மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளித்தார்.

ஆவணி மூல திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமது தவப்பயனால் சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் நெல்லையப்பர் கோவிலின் முன்பாக நின்று அழைத்தும் இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர், 'ஈசன் இங்கு இ்ல்லை, எருக்கும் குறுக்கும் எழுக' என்று சாபமிட்டு விட்டு மானூர் செல்ல முற்பட்டார்.

உடனே நெல்லையப்பர் சிவத்தொண்டராக வந்து கருவூர் சித்தரை தடுத்து பணிந்து அழைத்தார். அந்த இடமே தொண்டர்நயினார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. எனினும் சிவத்தொண்டரிடம் மறுத்து கூறிய கருவூர் சித்தர் மானூர் செல்கிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி, பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலியநாயனார், தாமிரபரணி, சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் ஜோதிமயமாய் காட்சி அளித்து சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர்.

மானூர் சென்ற கருவூர் சித்தர்

பின்னர் கருவூர் சித்தரையும் அழைத்து கொண்டு அனைவரும் நெல்லைக்கு வருகின்றனர். தொண்டர் சன்னதி வந்ததும் சித்தர், 'இங்கு ஈசன் உளன். எருக்கும் குறுக்கும் அருக' என சாபவிேமாசனம் வழங்குகிறார். இந்நிகழ்வு ஆவண மாத மூல நட்சத்திரத்தில் நடந்தததால் ஆவணி மூல திருவிழாவாக நெல்லையப்பர் கோவில், மானூர் அம்பலவாணர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது. 9-ம் நாளில் கருவூர் சித்தர் நெல்லை ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவில் மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார்.

ஜோதிமயமாய் காட்சியளித்த நெல்லையப்பர்

10-ம் திருநாளான நேற்று முன்தினம் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதி உலா வந்து, நேற்று அதிகாலையில் மானூர் அம்பலவாணர் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் ஜோதி மயமாய் காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.

தொடர்ந்து அங்குள்ள ஆவணிமூல மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கருவூர் சித்தரை அழைத்து கொண்டு சுவாமி பரிவாரங்களுடன் நெல்லை திரும்பினார்.

கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்ததையொட்டி மானூர் விழாக்கோலம் பூண்டது. கோவிலில் காலை முதல் மாலை வரையிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டது. விழாவையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story