ஆவின், பால்வளத்துறை அலுவலகங்களில் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை
தேனியில் ஆவின், பால்வளத்துறை அலுவலகங்களில் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட ஆவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சென்னையில் இருந்து ஆவின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று வந்தனர். அவர்கள் அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக கிடைத்த புகார்களின் பேரில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வரை விசாரணை நீடித்தது.
இதையடுத்து 2-வது நாளாக இன்று அரண்மனைப்புதூரில் உள்ள பால்வளத்துறை துணை பதிவாளர் அலுவலகத்துக்கு, ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு பணியாற்றும் அலுவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சமீப காலங்களில் பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் விவரங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் பேரில் துறை வாரியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.