கூட்டு குடிநீர் திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளது
கூட்டு குடிநீர் திட்டத்தில் ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஊராட்சித் தலைவர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
விளக்ககூட்டம்
குடிநீர் வினியோகம் செய்வதில் விடுபட்ட குக்கிராமங்கள், மேல்நிலைத் தொட்டிகள், குடிநீர்வினியோகத்தை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளக்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் (கிராம ஊராட்சி) விஜயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரசாந்த் குமார் முன்னிலை வகித்தார்.
இதில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ராதா, இளநிலை பொறியாளர்கள் நந்தகுமார், ராஜப்பன், செந்தில் குமார், சீனிவாசன் மற்றும் 31 ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுபட்ட கிராமங்கள்
கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பேசியதாவது:-
ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளது. மேலும் புதிய குடியிருப்பு பகுதிகள் விடுபட்டுள்ளது. 1992-ம் ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 30 வருடங்களுக்கு பிறகு 10 மடங்கு குடியிருப்புகள் அதிகரித்த நிலையில் வெறும் 40 ஆயிரம் லிட்டர் மட்டுமே அதிகரிக்கப்பட்டு 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் குடிநீர் தான் கிடைக்கிறது. இதிலும் முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை.
இது குறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஒன்றினைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. கிராம ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை தொட்டி அமைத்து 3 வருடங்களாக அதில் தண்ணீர் ஏற்றாமல் பயனற்ற நிலையில் தொட்டிகள் விரிசல் விட்டு பழுதடைந்துள்ளது. சில ஊராட்சிகளில் தண்ணீர் வினியோகம் இல்லாத நிலையில் பில் தொகை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
மறு சீராய்வு
எனவே ஊராட்சி பகுதிகளில் மறுசீராய்வு செய்து விடுபட்ட கிராமங்களை இணைத்து அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில் விடுபட்ட கிராமங்களை கணக்கெடுத்து மறுசீராய்வு செய்து மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.