மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய வேளையில் பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தவிர்க்க வேண்டும்
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். பிற்பகல் நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
கால்நடைகள்
தனியே வசிக்கும் முதியவர்கள் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.
கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டி போதுமான அளவுதண்ணீர் கொடுக்கவெண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.